Type Here to Get Search Results !

பூக்களும் பேசுமா?





* "பூக்களும் பேசுமா?" என்று கேட்டால், "பூக்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. அவை நம்மோடு அவற்றைப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று சில ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் சொல்கிறார்களே?

அது எப்படி? வாய் இல்லாமல், மொழி அல்லது வார்த்தைகளை உபயோகிக்காமல் பூக்கள் எப்படி பேசமுடியும். பேசினாலும் நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? வியப்பாக இருக்கிறதல்லவா?

மலர்கள் மிகவும் மென்மையானவை. சில பூக்கள் சுகந்த வாசனையை கொண்டவை. பெரும்பாலும் வண்ணமயமானவை. வெகுகாலமாகவே மனிதர்கள், காதல், அன்பு , பாராட்டு, இரங்கல் போன்ற அழகான மனித உணர்வுகளை அல்லது உணர்ச்சிகளை வெளிப்படுத்த பூக்களை உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

நோயுற்றவர்களுக்கு, அவர்களை விரைவில் குணமடைய, அழகான பூக்களை கொண்டு செய்த பூங்கொத்தை கொடுத்து, அன்பையும் ஆதரவையும் தெரிவிக்க பயன்படுத்துகிறார்கள்.


பூக்கள் மலர் மாலையாகவும் , தோரணங்களாகவும், விழாக்களுக்கும் , சுப நிகழ்வுகளுக்கும் முக்கிய பொருளாக தேவைப்படுகின்றன. அதே நேரத்தில், மலர் வளையங்களாக அமரத்துவம் அடைந்தவர்களின் மேனியையும், காலடியையும் அலங்கரிக்கின்றன.

நமது ஊரில் காணப்படுகிற, நாம் உபயோக்கின்ற ரோஜா , செவ்வந்தி , மல்லிகை போன்ற பூக்களை போல , பல விதமான மலர்கள் உலகெங்கிலும் மனித உணர்வுகளை பகிர பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு, 'பொக்கே' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற , ஒருவருடைய அன்பை , மரியாதையை வெளிப்படுத்த பூச்செண்டாக கொடுக்கப்படும் மலர்களை பற்றி கூகிள் செய்து பார்த்தால்....

'ஹைட்ரேஞ்சாஸ்', 'ஹார்டென்சியா' என்று அழைக்கப்படும் மலர்கள் (பொதுவாக ஜப்பான், ஆசியா, இந்தோனேசியா, இமயமலை மலைகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகிறது) இளஞ்சிவப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை, ஊதா மற்றும் பச்சை நிறங்களில் வருகின்றன. இவை நல்ல ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதலைக் குறிக்கும். அடுத்து 'பியோனிகள்' 'பான்சிகள், டெய்ஸி, சிவப்பு கார்னேஷன் (சிவப்பு நிற சுருள் பூக்கள்) மற்றும் சூரியகாந்தி மலர்கள் போன்றவை பூங்கொத்து அல்லது பூச்செண்டுகளில் இடம் பெறுகின்றன.

டெய்ஸி மலர்கள் ஒரு பார்வையிலேயே, நமது மனநிலையை உடனடியாக உயர்த்தும். ஒரு நோயாளி தனது நோயைச் சமாளிக்க சிரமப்படும்போது, டெய்ஸி மலர்கள் அதன் கவர்ச்சி மற்றும் வசீகரத்தால் அவர்களை உற்சாகப்படுத்தும். இவை புதிய தொடக்கங்களையும் செழிப்பையும் குறிக்கின்றன.


சூரியனைப் போலவே பிரகாசமாக இருக்கும் சூரியகாந்தி பூக்கள், நோயாளியின் சலிப்பான வாழ்க்கையில், சூரிய ஒளியைச் சேர்க்கின்றன. அதன் பிரகாசமான மஞ்சள் நிறம் மற்றும் அதன் அழகான கவர்ச்சி நோயாளியின் முகத்தில் ஒரு இனிமையான புன்னகையை ஏற்படுத்துகின்றது.

இதை போன்று பூக்களை பற்றிய தகவல்களை, நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பூக்கள், அவற்றின் உணர்வுகளை கடத்துவதை குறித்து ஒரு ஆச்சரியமான தகவல்... ஒரு அனுபவ பூர்வமான செய்தி ஒன்றை யாரோ முகநூலில் பகிர்ந்ததை படிக்க நேர்ந்தது. அந்த முகநூல் பகிர்விலிருந்து...

'ஒரு நண்பரின் தந்தை, முதுமையின் காரணமாக இறந்து போனார். அவர் மறைந்த சில நாட்களில், அந்த நண்பரின் வீட்டின் முன்புறத்தில் செழிப்பாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த செம்பருத்தி பூ செடி, கொஞ்சம் கொஞ்சமாக வாடிப் போக ஆரம்பித்தது.

அவர் வீட்டுக்கு, அடிக்கடி போய் வரும் உறவினர் ஒருவருக்கு , இந்த வித்தியாசம் பளிச்செனத் தெரிந்தது. செடியின் திடீர் வாட்டத்துக்கு காரணம் என்னவென்று, நண்பரிடம் விசாரித்தார்.

அவர் அதற்கு ,"அது ஏன் என்று தெரியல...இத்தனை வருஷம் நல்லாத்தான் இருந்தது...."

இருவரும் எதுவும் புரியாமல் அந்த செடியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நண்பரின் கண்கள் கலங்கி, கண்ணீர் வெளிப்பட்டது. அதை கவனித்த உறவினர்…

"என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.

"இறந்து போன எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச செடி இது. தினமும் காலையிலும் சாயங்காலமும் இந்த செடி பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் நிப்பார். இந்த செடியையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒருவேளை அவர் இந்தச் செடியுடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று கூட நாங்கள் நினைப்போம்."

அவர் அப்படி சொன்னதும் , அந்த உறவினருக்கு எங்கோ படித்த ஒரு விஷயம் சட்டென்று நினைவுக்கு வந்தது.

அதை அவர் அந்த நண்பரிடத்தில் சொன்னார்.

"ஒண்ணு செய்து பாருங்களேன்."

"என்ன?"

"நீங்க தினமும் அந்தச் செடி பக்கத்தில போய் நின்னு கொஞ்ச நேரம் பேசி பாருங்க."

'என்ன பேசணும்' என்று ஆர்வத்துடன் கேட்டார் நண்பர்.

அந்த உறவினர் சில யோசனைகளை சொன்னார்.

அடுத்த சில நாட்களில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.

பட்டுப் போய் விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அந்த செம்பருத்தி செடி, கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெற்றது.

மீண்டும் பழையபடி பூத்துக் குலுங்க ஆரம்பித்தது.  நண்பருக்கு ஒரே சந்தோஷம். அவர் அந்த உறவினரை அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார்.

சரி. அந்த நண்பர் செம்பருத்தி செடியிடம் தினமும் சொன்ன அந்த மந்திரம்தான் என்ன ?

"எனது அன்பான செம்பருத்தி செடியே...

உன் மீது என் அப்பா எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்று எனக்கு தெரியும். இப்போது அவர் இந்த உலகத்தில் இல்லை. ஒருவேளை அவரைக் காணாமல் கூட நீ வாடிப் போய் இருக்கலாம். ஆனால் உன்னோடு பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் படத்தை ஃபிரேம் போட்டு உள்ளே மாட்டி வைத்திருக்கிறேன்.

நீ தினமும் பூக்களை கொடுத்தால், அதை வீட்டுக்குள் கொண்டு போய், அப்பாவின் படத்தின் முன் வைப்பேன். தயவுசெய்து, என் அப்பாவின் படத்தில் வைப்பதற்காகவாவது, பூத்து விடு செம்பருத்தி செடியே..."

இவ்வளவுதான் நண்பர் சொன்ன அந்த மந்திர வார்த்தைகள்.

இந்த வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட அந்த செம்பருத்தி செடி, அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் வழக்கம்போல பூத்துக் குலுங்க ஆரம்பித்து விட்டது.

நண்பர் இப்போது சந்தோஷமாக இருக்கிறார். நண்பரின் அப்பாவும் ஃபோட்டோவில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.

செம்பருத்தி பூ செடியும் சந்தோஷமாக பூத்துக் கொண்டே இருக்கிறது.

"பூக்களும் பேசுமா?" என்ற கேள்விக்கு விடையும் கிடைத்தது.

Top Post Ad