Type Here to Get Search Results !

தினம் ஒரு குட்டிக்கதை தண்ணீருக்கான காசு தண்ணீரிடம் போய்ச் சேர்ந்தது

தினம் ஒரு குட்டிக்கதை :--
ஒரு ஊரில் ஒரு பால்காரன் பால் விற்றுப் பிழைத்து வாழ்ந்து வந்தான். கலப்படமற்ற, சுத்தமான, தரமான பால் விற்பதில் பிரசித்திபெற்ற அந்த பால்காரனுக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்துக் கொண்டே சென்றனர்.

இப்படியிருக்க ஒரு நாள் இவனுக்கு ஒரு நப்பாசை தோன்றியது. தனது லாபத்தை இன்னும் அதிகரிக்க வழி பார்த்தான்.

முடிவாக பாலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்தான்.
வழக்கம் போல் சந்தைக்கு சென்று பாலை விற்பனை செய்தான். வாடிக்கையாளர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை.

சில நாள் கழித்து பாதியளவு தண்ணீரை கலக்க ஆரம்பித்தான். வாடிக்கையாளர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை.

அவன் எதிபார்த்தது போலவே இரு மடங்கு ஆதாயம் கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். லாபப்பணத்தோடு வீட்டிற்குச் செல்லும் வழியில், களைப்பாறவென ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்தான்.
அந்த நேரத்தில் ஒரு குரங்கு வந்து அவனது பணப்பையை எடுத்துக் கொண்டு மரத்தின் மீது சென்றது. கத்திக் கதறி குரங்கிடம் மன்றாடினான் பால்காரன் . பணப் பையைத் திருப்பித் தருமாறு கெஞ்சினான்.

குரங்கின் கையில் ஒரு பொருள் கிடைத்தால் எப்படி விளையாட்டுக் காட்டும் என்று தெரியும்தானே..! ஒரு பணக்காசை அவனிடமும் மறு காசை நதியிலும் மாறி மாறி வீசிமுடித்தது.

குரங்கு தன்னிடம் எறிந்த பணத்தை எண்ணிப் பார்த்தான். அங்குதான் ஆச்சரியம் அவனுக்காக காத்திருந்தது! கலப்படமற்ற பாலின் வருமானம் அவன் கையில் வந்து சேர்ந்திருந்தது.
அப்போதுதான் தப்புசெய்பவன் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்தான். அவன் அண்ணாந்து பார்த்தவாறு பின்வரும் வாசகத்தை சொன்னான்:

“பாலுக்கான காசு பால்காரனிடம் வந்து சேர்ந்தது, தண்ணீருக்கான காசு தண்ணீரிடம் போய்ச் சேர்ந்தது!"

நாம் அநியாயமாக சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயும் சந்தேகமின்றி அநியாயமாக ஒருநாள் நம்மை விட்டுப்போகும்...

Top Post Ad